Oct 29, 2011

The Page Turner-பிரெஞ்ச்[2006]பழி வாங்கும் பருவ மங்கை


பூ ஒன்று புயலாகி... ஒரு பியானோ மேதை வாழ்க்கையில்....
 சூறாவளியாக சுழல்வதுதான் இப்படம்.
சைக்கோ திரில்லர் வகையில் வந்த கிளாசிக் படம்.
இப்படத்தை எழுதி இயக்கியவர் Denis Dercourt.

மெலினா என்ற உலகசினிமாவை பார்க்காத உலகசினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.
அந்தப்படம் பார்த்தவர்கள் மெலினா என்ற அழகு தேவதையாக வந்த மோனிகா பெலுச்சியையும் மறக்க முடியாது.
மயக்கும் மோனிகாவின் கட்டழகுக்கு சற்றும் குறையாத கவர்ச்சியுடன் நம்மை கிறங்க வைக்கிறாள் மெலனி என்ற கதாபாத்திரத்தில் வரும் பருவப்புயல் Deborah Francois..
பிரான்சில் மட்டும் இது போன்ற தேவதைகள் அதிகமாக உற்பத்தியாவதின் ரகசியம் என்ன?

மெலனி தனது கல்வியின் ஒரு பகுதியாக ஒரு சட்ட நிறுவனத்தில் பணியாற்ற வருகிறாள்.
தனது முதலாளியின் வீட்டிற்க்கு உதவிக்கு ஆள் தேவை என்பதறிந்து விண்ணப்பித்து தேர்வாகி விடுகிறாள்.
முதலாளியின் மனைவி ஒரு பியோனா இசை மேதை.
மெலனியின் அழகும்....அர்ப்பணிப்பான சேவையும் எல்லோரையும் வசியப்படுத்துகிறது.
இசை நிகழ்ச்சியில், பியானோ இசைக்குறிப்பு அடங்கிய புத்தகத்தின் பக்கங்களை சரியாக புரட்டி....
வாசிப்பவருக்கு உதவும் பேஜ் டேர்னர் பதவிக்கு உயர்கிறாள்.

இதன் பிறகு மெலனியின் புதிரான நடவடிக்கள் பியானோ மேதையின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது.

பியானோ மேதையின் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி மூச்சடக்கி பயிற்ச்சி பெறும் போது அச்சிறுவனது தலையை தண்ணீருக்குள்ளேயே வைத்து அழுத்துகிறாள்.
அவன் உயிர் பிரியப்போகும் தருணத்தில் விட்டு விடுகிறாள்.
ஏன் இந்த கொலை வெறி?

பியானோ மேதையின் இசை நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக செலோ வாசிக்கும் கலைஞன் மெலனியிடம் வாலாட்டுகிறான்.
கைகளால் மார்பில் விளையாடியவன் கால்களை பஞ்சராக்கி விடுகிறாள் மெலனி.
செலோ என்ற வாத்தியக்கருவியின் அடியில் மிகக்கூர்மையான 8 m.m கம்பி சைசுக்கு ஆணி இருக்கிறது.
அதை வைத்து அவன் காலில் ஒரே.... ஏத்த்த்த்த்த்து.
இனி அவன் பொண்டாட்டி மார்பைக்கூட பிடிக்க மாட்டான்.

மிக முக்கியமான இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது மாயமாகி விடுகிறாள் மெலனி.
மெலனி இல்லாமல் நிகழ்ச்சி சொதப்பலாகிறது.
இசை மேதையின் இசை வாழ்க்கையை மட்டுமல்ல...
 குடும்ப வாழ்க்கையையே சீரழித்து விடுகிறாள்.
மெலனியின் வஞ்சத்திற்க்கு காரணம் என்ன?
விடை படத்தில் பாருங்கள்.


இப்படம் என்னை மிகவும் கவர்ந்ததற்க்கு காரணம் பியானோ.
இதில் பிறக்கும் இனிய இசையில் மிக எளிதாக கரைந்து விடுவேன்.
பியானோவை மிகச்சரியாக தமிழ்ப்படங்களில் பயன்படுத்தியவர் நம்ம ராஜாதான்.
அதிலும் ஹேராம் படத்தில் வரும் பியானோ பாடல் மாஸ்டர் பீஸ்.
கமலும், ராணி முகர்ஜியும் கலந்து செய்யும் அந்தக்கலவிக்கவிதை....
தமிழ் சினிமாவின் கஜூரகோ.

பியானோ இசையை பிரதானப்படுத்தி வந்ததில் என்னைக்கவர்ந்த
பிற உலகசினிமாக்கள்
The Pianist
The Piano
 The Shine[இப்படத்திற்க்கு ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன்]

Oct 26, 2011

ஏழாம் அறிவை காப்பியடிக்கலாம் வாங்க....

 “ஏழாம் அறிவு படத்தை பார்த்து....
ஹாலிவுட்காரர்கள் வேண்டுமானால் காப்பியடித்துக்கொள்ளலாம் ”என ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி கொடுக்க ஹாலிவுட்டே பரபரப்பாகி சுறுசுறுப்பாகி விட்டார்கள்.

மெமண்டோ,இன்சப்ஷன் போன்ற வெற்றி படங்களை தந்த கிறிஸ்டோபர் நோலன் டீம்...

இன்சப்ஷன் ஹிட்டை தூக்கி சாப்பிட மாதிரி மெகா ஹிட் கான்சப்ட் பிடிச்சுட்டேன் என நோலன் கொக்கரிக்க
 “சார்...இந்த படத்துலயும் கனவு வருதா....
ஏன்னா...இன்சப்ஷன் நடிச்சதுல இருந்து எது கனவு?எது நிஜம்? புரியாம தவிக்கிறேன்.
இண்ணைக்கு காலையில கக்கா போகும் போது கூட அந்த கன்ப்யூசன் வந்திருச்சி...
கனவுல போறமா?நிஜத்துல போறமான்னு?
அப்புறம் சக்கரம் விட்டு கண்டு பிடிச்சேன்” என டிக்காப்ரியா பரிதாபமாக உரைக்கிறார்.

 “சார்...கவலையை உடுங்க...
எங்க ஊர் தக்காளி ஹன்சிகாதான் உங்க ஜோடி....
கேட் வின்ஸ்லேட்டையே உஷார் பண்ண பார்ட்டி நீங்க...
ஹன்சிகா உங்களுக்கு ஜூஜூபி மேட்டரு”என சந்தானம் கலாய்க்கிறார்.

டிக்காப்ரியா சந்தானத்தை பார்த்து மேலும் கலவரமாகிறார்.

“சார்...சமீப தமிழ் படங்கள் எல்லாத்தையும் பாத்தேன்.
 படத்துல கதை இருக்கோ இல்லியோ....
 இவர் இருக்காரு...
படம் பூரா ஹீரோ கூட வந்து எல்லாரையும் கலாய்ப்பாரு...
இண்ணைக்கு வெள்ளிக்கிழமைன்னு இவர் டயலாக் சொன்னாக்கூட அந்த ஊர் ஜனங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க ”
என டிக்காப்ரியாவை தெளிவாக்குகிறார் நோலன்.

“சார்...நேற்று வரைக்கும் நீங்க ஹாலிவுட் ஸ்டார்.
இண்ணையிலயிருந்து நீங்க ‘மெர்க்குரிஸ்டார் டிக்கா காந்த்’
அப்புறமா உங்க ரசிகர்களை வச்சு நற்பணி மன்றம் திறந்து தையல் மிசினெல்லாம் கொடுக்கணும்.
அப்பதான் ஸ்ட்ரெயிட்டா ஒயிட் ஹவுஸ் போக முடியும்” என டிக்காப்ரியாவை மேலும் டெரராக்குகிறார் சந்தானம்.

“நான் எதுக்கு ஒயிட் ஹவுஸ் போகணும்?”என டிக்காப்ரியா மெர்சலாகி...மெமரி லாசாகி.... “அபிராமி....அபிராமி” என குணாவாகிறார்.

டைட்டானிக்,அவதார் வெற்றி படைப்புகளை தந்த ஜேம்ஸ் கேமரூன் டீம்...

டாம் க்ரூசை பார்த்து “ஒப்பனிங் சீன்ல 100 ஹெலிகாப்டர்ல வந்து இறங்குறீங்க”என ஷாக் கொடுக்கிறார் கேமரூன்.

 “நான் எப்படி ஒரே நேரத்துல 100 ஹெலிகாப்டர்ல வந்து எறங்க முடியும்?”என  டாம் க்ரூஸ் ஜெர்க்காக....
 “டாம்... ஒயிட்& ஒயிட்ல கறுப்பு கூலிங்கிளாஸ் போட்டு லாங் கோட்டு பறக்க  ஒரு ஹெலிகாப்டர்ல இறங்கி ஸ்டைலா லாங் வாக் வற்றீங்க....
பின்னாடி 99 ஹெலிகாப்டர்ல 99 பாடிகார்ட்ஸ் ஃபுல் பிளாக சூட்ல....
 கருப்பு கூலிங் கிளாஸ்ல....
வற்றாங்க...
ஃபுல் ஷாட் ஸ்லோ மோசன்தான்
ரீ ரிகார்டிங் யுவன் சங்கர் ராஜா போடறார்.இந்த மியுசிக்ல அவர் எக்ஸ்பர்ட்.
டொய்ங்...டொய்ங்னு....அலற வைப்பாரு.
அப்புறம், நான் தனி மரம் இல்ல....
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு...
இரண்டு ஏக்கர் வாழை மரம்....
மூணு ஏக்கர் முந்திரின்னு பஞ்ச் டயலாக் பேஸ்ணும்”என கேமரூன்மூச்சு வாங்க டாம் மயக்கமாகிறார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் பொங்குகிறார்.

“என் இனிய இங்கிலீஷ் மக்களே!
ஜூராசிக் பார்க்கில் டைனசரை காட்டி பயமுறுத்திய இந்த ஸ்பீல்பெர்க்
கவுபாய் மன்னன் கிளீண்ட் ஈஸ்ட்வுட் கை பிடித்து வருகிறேன்.
துப்பாக்கி பிடித்த கையில் தொரட்டி கொடுக்கப்போகிறேன்.
அந்தக்கரிசக் காட்டின் கந்தக வாசத்தை பாசத்தோடு பறிமாறப்போகிறேன்....கட்..கட்
 யாருப்பா.... கேமரா பீல்டுக்குள்ளே....

அய்யா...அய்யா....எஞ்சாமி.....நா...நல்லா வேசம் கட்டுவேய்யா....
எங்கூர்ல ஒரு பய கூப்பிட மாட்டேங்கான்.
அய்யா...வெள்ளச்சாமி....
நீயாவது ஒரு வேசம் கொடு அய்யா...

ஒரு நாளைக்கு மூணு வேளை சோறு போட்டு முப்பது ரூவா சம்பளம்..... ஒகேவா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குவிண்டின் டொரண்டிணோ ஆபிஸ் வாசலில்....
பரிதாபமாக டாம் ஹேங்சும்,பிராட்பிட்டும்.....
டாம் ஹேங்க்ஸ்: என்னை டைரக்டர் ஒரு வருசத்துக்கு குளிக்ககூடாது...
நோ சேவிங்,நோ கட்டிங்ன்னு சொல்லிட்டாரு....
இதாவது பரவாயில்ல ...
மொத்த படத்துக்கும் ஒரே ஒரு டயலாக்தான்...
அகம்பாவம் பிடிச்ச சாமி.

பிராட்பிட்: டேய்... அது அகம்பாவம் பிடிச்ச சாமியில்லடா....
அகம் பிரம்மாஸ்மி.

டாம் ஹேங்க்ஸ்: டேய்...டேய்... நீ அந்த டயலாக்கை சூப்பரா சொல்லுற!
பேசாம என் ரோலை நீஎடுத்துக்கோ....
உன் ரோலை நான் பண்ணுறேன்...ப்ளீஸ்டா...

பிராட்பிட்: என் ரோலா...[மாட்னடா மவனே]
செம்மண் தரையில தலையை தேச்சு முடியை செம்பட்டையாக்கணும்...
டெய்லி தார்ல பல்லை விளக்கி பல்லை கருப்பாக்கணும்....
ரெண்டு கண்ணையும் ஒண்ணரைக்கண்ணா காட்ட பிராக்டிஸ் பண்ணணும்...அப்புறம்...
டேய்...டேய்..எங்க ஒடுற....இருடி....தப்பிக்க மட்டும் முடியாது.

Oct 23, 2011

The Secret of Santa Vittoria-1969[ஆங்கிலம்]குடிமகனே...பெருங்குடிமகனே...


அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

கம் செப்டம்பர் போன்று இப்படமும் ஜாலி தீபாவளி.இப்படத்தின் டிவிடி சமீபத்தில்தான் கிடைத்தது.
உடனே பார்த்தற்க்கு காரணம் அண்டனி க்வீன்.

அவரது பரம ரசிகன் நான்.
ஒமர் முக்தாரில் தொடங்கிய காதல் இன்று வரை குறையவில்லை.
திரையில் அவர் தோன்றினால் எதிரில் இருக்கும் அனைவரும் பணால்.
ஹாலிவுட்டில் ஜாலியாக படமெடுப்பதில் சூரர் ஸ்டான்லி கிராமர்.

அவர் அண்டனியோடு இணைந்து நடத்திய ஜாலி அராஜகம்தான் இப்படம்.
படம் பார்த்து முடித்த பின் இப்படைப்பாளிகளுக்கு மனசார...
நான் சொன்ன வார்த்தை...
சியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

சாண்டா விட்டோரியா மக்களுக்கு ஒரே தொழில் திராட்சை பயிரிடுவது...
பயிரிட்ட திராட்சையிலிருந்து ஒயின் தயாரிப்பது.
இரண்டாம் உலகப்போரில் முசோலினி வீழ்ச்சியில் படம்துவங்குகிறது.
பாஸிஸ்டுகள் வீழ்ந்த குழப்பத்தில் குடிகாரக்கோமாளி பாம்பிலோனா[அண்டனி க்வீன்] மேயராகி விடுகிறான்.


மேயரான கெத்தில் வீட்டுக்கு போனால் மனைவியின் வரவேற்ப்பு தனியாக இருக்கிறது.
பாம்பிலோனாவை அவனது மனைவி தினமும் கடவுளாக நினைத்து அர்ச்சிப்பவள்.
நாயே...
பேயே...
உதவாக்கரையே...
தண்டச்சோறே...
குடிகார மட்டையே....
என ஸ்பெஷல் கந்தசஷ்டி மூலம் தினமும் பூஜிப்பவள்....
மேயர் ஸ்பெஷலாக பூரிக்கட்டை சாமரம் வீசுகிறாள்.[இப்படத்தை என் மனைவிக்கு காட்டப்போவதில்லை]

எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற வடிவேலுவாக இக்காட்சியில் அண்டனியின் நடிப்பு சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ப்

காலையிலேயே பல் விளக்காம குடிச்சு ஏத்துன போதையை இறக்குர மாதிரி பேரிடி செய்தி வருகிறது.
ஜெர்மன் ராணுவம் இவர்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க வந்து கொண்டிருக்கிறார்கள்
என்பதே பேரிடி.
மொத்த கிராமத்தின் சொத்தாக இருப்பது ஒரு மில்லியனுக்கும் மேற்ப்பட்ட ஒயின் பாட்டில்கள்.
ஜெர்மன் ராணுவத்திற்க்கு தெரியாமல் எப்படி ஒளித்து வைக்கிறார்கள்?
ஒளித்ததை கண்டெடுத்தார்களா?
என்பதே படம்.
இப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை அப்படியே சுட்டு ஷோலே திரைப்படத்தில் வைத்துள்ளார்கள்.
தண்ணியடித்து விட்டு....
உயரமான வாட்டர்டேங்கில் நின்று தள்ளாடிக்கொண்டு....
“குதித்து விடுவேன்” என்று ஊர் மக்களை அண்டனி மிரட்டியதை ஷோலேயில்
தர்மேந்திரா ஜெராக்ஸ் செய்தார்.

சீரியசான ஒரு சம்பவத்தை நகைச்சுவை கலந்து தருவதற்க்கு தனி சாமர்த்தியம் வேண்டும்.
அதில் அன்றும்..இன்றும்...என்றும்... மாஸ்டர் சாப்ளின்தான்.
அதற்க்கு அடுத்த வரிசையில் முதலிடம் ஸ்டான்லி கிராமருக்கு கொடுக்கலாம்.

படம் பார்த்து முடிந்ததும் சாண்டா விட்டோரியா ஒயின் குடிக்கணும் போல நாக்கு நமநமக்குது.
கிடைக்குமா நண்பர்களே....

விருதுகள் விபரம்:
[தகவல் உபயம் விக்கிபீடியா]

The film was nominated for two Academy Awards for Film Editing (William A. Lyon and Earle Herdan) and Best Music Score (Ernest Gold). It was nominated for an Eddie award by the American Cinema Editors, USA for best edited feature film.[1]
The film won the Golden Globe Award for Best Motion Picture Comedy and was nominated for Best Director (Stanley Kramer), Best Actor Comedy (Anthony Quinn), Best Actress Comedy (Anna Magnani), Best Original Score (Ernest Gold) and Best Original Song ("Stay", Ernest Gold and Norman Gimbel)

Oct 20, 2011

BLISS [Turkish]2007-பெண்ணே நீ ஒழிக...


பெண்ணாய் பிறத்தற்க்கே மாதவம் செய்திடல் வேண்டும் எனக்காலகாலமாக ஜல்லியடித்து ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை கொடுமைப்படுத்தப்படும் இனம் பெண்ணினம்.
வாச்சாத்தி கொடுமைக்கு நிவாரணம் பெற எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது?
ஒவ்வொரு நொடியும் பெண்கள்.... உலகில் ஏதாவது ஒரு மூலையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அந்த துன்பக்கடலின் ஒரு துளிதான் மரியம்.
அந்த அனிச்ச மலருக்கு வயது 17.

துருக்கி தேசத்து மலைகிராமத்தில் ....
நெடிதுயர்ந்த மலையின் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும்...
 சலனமில்லாத குளத்தின் கரையில்...
 துவைத்துப்போட்ட துணி போல் கிடக்கிறாள் மரியம்.
படத்தை உற்று பாருங்கள்.
அந்த இளங்குருத்தின் குருதி தொடை வழியே வழிந்தோடி குளத்து நீரில் கலப்பதை காண முடியும்.

முதல் காட்சி....முதல் ஷாட்டிலேயே இத்துன்பத்தை...துயரத்தை காட்டிய விதத்திலேயே 'நான் ஒரு உலகசினிமா வித்தகன்' என்பதை சொல்லி விட்டார் இயக்குனர் Abdullah Oguz.

நடந்த கொடுமைக்கு நிவாரணம் தேடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் ரணமாக்குவதானே நமது குல வழக்கம்.
தாயில்லாத மரியத்துக்கு பேயாக சித்தி.
கற்பழிக்கப்பட்ட பெண்ணை அழிப்பதுதான்....எங்குமே சாத்திரம்...சம்பிரதாயம். “தொங்கு”என கயிரை பரிசளிக்கிறாள் சித்தி.
உடலும்,மனமும் ரணமாகிப்போன மரியத்துக்கு ஆதரவு அன்றும்...இன்றும்...என்றும் ஒரே ஒரு பாட்டிதான்.

அவரிடம் கூட தன்னைக்குலைத்த மாபாதகனை காட்டிக்கொடுக்க மறுக்கிறாள் மரியம்.
மரியத்தை ஒழிப்பது எப்படி என்று ஊரே ஒன்று கூடி பேசுகிறது.
முடிவாக ஒரு ராணுவ வீரனிடம் பணியை ஒப்படைக்கிறார்கள்.
கொலைக்களனாக இஸ்தான்புல் நகரத்தை தேர்ந்தெடுத்து மரியத்தை பலியாடாக அழைத்துச்செல்கிறான்.
புண் பட்ட மரியத்தின் மனதுக்கு ஒவியம் போல் காட்சியளிக்கிறது இஸ்தான்புல் நகரம்.
நகரம் மறைந்திருக்கும் நரகம் என்பதறியா பேதை.
ராணுவத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக பணிபுரிந்தவனுக்கு போட்டுத்தள்ள சரியான இடம் சொல்லியா தர வேண்டும்?

துடிக்கும் துப்பாக்கியால் மரியத்தின் உயிரை குடிக்க முடியாமல் தவிக்கிறான்.
காரணம்....சிறு வயது முதல் அவனால் நேசிக்கப்பட்டவள் மரியம்.
தன்னை நேசித்தவன்... யாசிப்பது உயிர்... என்பதறிந்து  “எடுக்கவேண்டாம்....கொடுக்கிறேன்”என தற்கொலைக்கு துணிகிறாள்.
 “தூயவனே! செல்...என் தந்தையிடம் சொல்...
மரியம் மாசற்றவள்.....சொர்க்கத்தில் என் தாயை சந்திக்க செல்கிறேன்” என மரணத்தை நோக்கி மரியம் பாய்கையில் தடுத்து விடுகிறான் மாவீரன்.
பல்லாயிரம் உயிரைக்குடிக்கும் அணு உலையை திறக்கத்துடிக்கும் மத்திய அரசா அவன்?
மனிதநேயம் மிகுந்த மனிதன்.

இக்காட்சியை நூறு முறை பார்க்க வேண்டும் நமது படைப்பாளிகள்.
நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை ...இவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒரு காட்சியை எப்படி வீர்யமாக்குகின்றன என்பதற்க்கு இலக்கணம் இக்காட்சி.
இது போன்ற படங்களை நேசித்து பார்க்கும் படைப்பாளிகளிடம் வேலாயுதமும் ஏழாம் அறிவும் தோன்றாது.

வாழ நினைத்தால் வாழலாம்....
வழியா இல்லை பூமியில்.... என புறப்பட்ட ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஒரு பேராசிரியர்.
அலை கடலில் ஒரு தோணி...
அதில் வாழ்வதே என் பாணி....
என உல்லாசப்படகில் உலகம் சுற்றும் வாலிபன் அவர்.



அவரது தாடி மட்டும் வெள்ளையில்லை.. மனமும்.. என எண்ணுகிறாள் மரியம். 
அவர்,  பாலா....பாலிடாலா....என சந்தேகிக்கிறான் மாவீரன்.

மரியத்தை கெடுத்த மாபாவி யார்? என்ற முதல் கேள்வியிலிருந்து....
பேராசிரியர் நல்லவரா?கெட்டவரா?
மரியத்தை மாவீரன் ஏற்றானா?மறுத்தானா?
மரியம் வாழ்வாளா?வீழ்வாளா?
துப்பாக்கி வெடிக்குமா?வெடிக்காதா?
[மரியத்தின் உயிரைக்குடிக்க நினைத்த துப்பாக்கி... இன்னொரு காட்சியில் குளோசப்பில் காட்டப்படுகிறது.
துப்பாக்கிக்கு குளோசப் ஷாட் போட்டால் அது வெடிக்க வேண்டும் என்பது மாமேதை ஹிட்ச்ஹாக் கடைப்பிடித்த கோல்டன் ரூல்.]
என பல துணை கேள்விகளோடு படம் பயணிக்கிறது.


வாருங்கள்....அவர்களோடு பயணித்து விடை தேடுவோம்.

என் முதல் பதிவில் குறிப்பிட்டபடி...
களவாணியில் நம்பிக்கையாகி....
 இன்று வாகை சூடி...
 நட்சத்திரமாக ஜொலிக்கும் இயக்குனர் ஏ.சற்க்குணத்துக்கு...
 இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

Oct 11, 2011

The Red Balloon-1956[France] 34 நிமிட வசனமில்லா கவிதை

ரெட் பலூன் குழந்தைகளுக்கான படம்.
நம்மை குழந்தைப்பருவத்திற்க்கு ஒரு உல்லாசப்பயணமாக அழைத்து செல்கிறது.
ஒன்றிரண்டு வார்த்தைகளைத்தவிர சுத்தமாக வசனமேயில்லாமல் இக்கவிதையை படைத்த பிதாமகன் Albert Lamorisse.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தனது மகனையும்,மகளையும் நடிக்க வைத்து.... குடும்பத்தோடு நாம் பார்க்கும்படி ஒரு குதூகல அனுபவத்தை வழங்கிய இயக்குனருக்கு பலூன் பொக்கே பரிசாக வழங்க வேண்டும்.
அதுதான் ஆகச்சிறந்த பரிசு என்பதை படத்தை பார்த்த பிறகு நீங்கள் உணர்வீர்கள்.

குழந்தை முகத்தின் நேரே கிலுகிலுப்பையை ஆட்டினால் சிரிக்கிறது.
நம் முகத்தின் நேரே யாராவது கிலுகிலுப்பையை ஆட்டினால் சிரிப்போமா?
ஆட்டியவன் கையை முறித்து விட்டு வேண்டுமானால் சிரிப்போம்.
கிலுகிலுப்பையை போல ரெட் பலூன் திரைப்படமும் நம்மிடம் இருக்கும் குழந்தைதன்மையை அளக்கும் மீட்டராகச்செயல்படுகிறது.

பள்ளிக்கு செல்லும் சிறுவன்... மின் விளக்கு கம்பத்தில் சிக்கித்தவிக்கும் பெரிய சிவப்பு பலூனை மீட்டெடுக்கிறான்.


பலூனோடு வரும் சிறுவனை பேருந்தில் ஏற்ற மறுக்கிறார் நடத்துனர்.
பலூனைப்பிடித்தபடி ஒடியே பள்ளிக்கு செல்கிறான்.

பள்ளிப்பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு வகுப்பு முடிந்ததும் பெற்றுக்கொண்டு வீட்டிற்க்கு வருகிறான்.

அம்மா பலூனை தூற எறிந்து விட்டு பையனை மட்டும் வீட்டிற்க்குள் அழைத்து செல்கிறாள்.
பலூன் நைசாக வந்து சிறுவன் அறை ஜன்னலை தட்டுகிறது.


இந்தக்காட்சியிலிருந்து சிறுவனுக்கும் பலூனுக்குமான பாண்டசி உலகம் தொடங்குகிறது.
நம் மனதை கொள்ளையடிக்கும் காட்சிகள் வரிசையாக வந்து திணற வைக்கிறது.
ஹாரி பாட்டர் படமெல்லாம் இப்படத்தின் கால் தூசுக்கு பெறாது.




ரெட் பலூன் திரைப்படம் அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் நர்சரி பள்ளிகளில் கட்டாய படமாக காட்டப்பட்டு வருகிறது.
இப்படம் குழந்தைகளுக்காக....குழந்தைகளால்....குழந்தை மனம் படைத்த இயக்குனரால் படைக்கப்பட்ட திருக்குறள்.
ரெட்பலூன் பெற்ற விருதுகள்....

Wins
Other wins
  • Best Film of the Decade Educational Film Award.[19]
நன்றி விக்கிப்பீடீயா.