May 30, 2012

Hey Ram-நட்பென்ற மதத்தில் சங்கமிப்போம்[2000\ஹேராம்=006]


 “மகத்தான இலக்கியவாதிகளும்... கலைஞர்களும்... மானுட அவலங்களின் துயரத்தினூடாக.... அந்த மானுட அவலங்களுக்கான....
காரணங்களை தேடிச்செல்கிறார்கள்.
அந்தக்காரணங்களை,நிரந்தரமாக மனித மனங்களிலிருந்து அகற்றுகின்ற... பொறுப்பையேற்று... அதை நோக்கியே... அவர்களது படைப்புகள் இயங்குகின்றன”

எழுதியவர்: யமுனா ராஜேந்திரன்
நூல்: இந்தியப்பிரிவினை சினிமா இந்து-முஸ்லீம் பிரச்சினை
வெளியீடு:உயிர்மை பதிப்பகம்

[இந்த பொன்னெழுத்துக்கள் 2000ல் வெளி வந்த ஹேராமுக்கும் பொருந்தும்.
2012ல் வெளி வந்திருக்கிற வழக்கு எண்ணுக்கும் முழுமையாகப்பொருந்தும்.]

இந்நூலில் இந்து-முஸ்லீம் பிரச்சினையை பேசும் மிக முக்கிய ஏழு படங்களை ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்
1.எம்.எஸ்.ஸத்யூவின்...கரம் ஹவா
2.கோவிந்த் நிஹ்லானியின்... தமஸ்
3.ஸியாம் பெனகலின்....மம்மோ
4.பமேலா ரூக்ஸின்...டிரெய்ன் டூ பாகிஸ்தான்
5.தீபா மேத்தாவின்... எர்த
6.கமலஹாசனின்...ஹேராம்
7.சபியா சுமேரின்...காமோஸி பானி.

ஏழுமே சப்தஸ்வரங்கள்தான்.
ஆனால் பாபர் மசூதி பிரச்சனையை உள்ளடக்கியதில்... ஹேராமை ஒரு படி மேலாக கருதுகிறேன்.



ஆர்க்கியாலஜிகல் அதிகாரிகளின் கிளப்புக்கு அம்ஜத் குடும்பத்துடன் காரிலிருந்து இறங்குகிறான்.
மகன் நண்பர்களோடு குடித்து கும்மாளம் போடப்போகிறான் என்பது தெரிந்தும்... அம்ஜத்தின் தாயும் தந்தையும் மலர்ந்த முகத்துடன் விடை பெற்றுச்செல்கின்றனர்.
இவர்களுக்கு நறுக்கு தெரித்தார் போல்... எண்ணி நாலு ஷாட்...டைட்டாக வைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.
ஏனென்றால் இவர்கள் பின்னால் இந்து வெறியர்களால் கொல்லப்பட இருக்கிறார்கள்.

அம்ஜத்.... தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு கிளப்பில் குடிக்க வருவது....வெஸ்டர்ன் கல்ச்சருக்கு மாறி விட்டதை தெளிவாக்குகிறது.

[விஸ்கி கோப்பைகள் உரசிக்கொள்கின்றன]
வீலர் : ட்டூ இண்டியா 
அம்ஜத் : யெஸ்..டூ இண்டியா...
ராம் : இண்டியான்னுட்டா...[பேசியபடி உள்ளே வருகிறான்] 
ம்...அது சரி.
கிளாசை மோதிட்டு...டூ இந்தியான்னுட்டா போறுமா?
எந்த இந்தியா?முழுசா?பாதியா?
வீலர் : ஹா...ராம்...வாட் ஈஸ் யுவர் பாய்ஸ் தன்?
ராம் : ம்...பார்ட்டீஷன் சர்....ஐ வாண்ட் எ சிங்கிள் கண்ட்ரி.
வீலர் :ஐ ம் ஷ்யூர் தட் அம்ஜத் வுட் வாண்ட் எ பாகிஸ்தான் அண்ட் எ லார்ஜர் ஒன் அட் தட்.
அம்ஜத் : நோ வே சர்...தே வாண்ட் ட்டூ இம்போஸ் ஷரியத்.
[ராமிடம்]
அப்புறம் குடிக்க முடியாது.
[வீலரிடம்]
நோ...தாங்க் யூ...நோ லார்ஜ் பாகிஸ்தான்.
எ லார்ஜ் ரம் ஈஸ்... ஆல்ரைட் பை மீ...சியர்ஸ்...


மேற்படி உரையாடல்கள் வீலர்,ராம்,அம்ஜத் மூவர் நிலைப்பாட்டை விளக்குகின்றன.
இதில் வீலரின் உரையாடலை மட்டும் கவனியுங்கள்.
இந்தியா-பாகிஸ்தானை பிரிப்பதில் வெள்ளைக்காரனுக்கு இருந்த ஈடுபாடு  தெரியும்.

இந்தக்காட்சியிலேயே... பணக்கார வியாபாரியான... லால்வானி மனைவி குழந்தைகளுடன் வந்து சேருகிறான்.
மூவருமே சென்னை கிறிஸ்டியன் கல்லூரி நண்பர்கள் என்பதை அவர்கள் உரையாடலில் சொல்லப்படுகிறது.
இந்தக்காட்சி முழுக்க....முழுக்க... நட்பின் கொண்டாட்டங்கள்.

லால்வானியை சிந்தியாக படைத்ததில் காரணம் இருக்கிறது.
பிரிவினையில் பாதிக்கப்பட்ட இனங்களில் சிந்தியும் ஒன்று.
லால்வானிக்கு குங்குமமிட்டு கற்பனை செய்தேன்...
அத்வானி போலவே இருந்தது!

இந்தக்காட்சியில் ஒரு வெள்ளைக்காரன் தண்ணி போட்டு விட்டு முட்டாள் மாதிரி பேசி நடந்து கொள்வான்.
எதற்காக இந்த பாத்திரப்படைப்பு ?
கேள்வி வருகிறது....
நம் மக்களிடம் வெள்ளைக்காரன் என்றாலே உலகமகா புத்திசாலிகள்தான் என ஜால்ரா அடிக்கும் பொதுப்புத்தி இருக்கிறது.
அந்த சிந்தனைக்கு ஆப்படித்திருக்கிறார் கமல்.


இந்தக்காட்சியிலும் ராமின்... டயலாக் டெலிவரி,உடல் மொழி அப்படியே வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருந்து உத்தியோகம் பார்த்த மேல் ஜாதி இந்துக்களை பிரதிபடுத்துவதை காண முடியும்.
இதற்கு நேர்மாறாக அம்ஜத் கால் மேல் கால் போட்டு உரையாடுவதில்...
பவர் தெரியும்.

மனைவியிடமிருந்து போன் வர...ராமை அம்ஜத்தும்,லால்வானியும் கலாய்ப்பது நட்பின் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ராமிற்க்கு அம்ஜத்தின் மனைவி ராக்கி கட்ட விரும்புவது,ராமின் மனைவிக்கு அம்ஜத்தின் மனைவி சென்னையிலிருந்து தாலி வரவழைப்பது....இவை எல்லாமே இந்து-முஸ்லீம் நண்பர்கள் மதங்களை கடந்து எவ்வாறு இருக்க வேண்டும் என்று படைப்பாளி கமல் காட்சிப்பபடுத்தியிருக்கிறார்.

வீலர் பியோனோ வாசிக்கும்போது...லால்வானியின் தோளில் நட்புரிமையோடு கை போட்டிருக்கும்... ராமின் விரல்கள் பியோனோ வாசிப்பது போல் பிங்கரிங் செய்யும்.
ராம் பியோனோ வாசிப்பு திறனுக்கு இங்கேயே லீட் வைத்து விட்டார் இயக்குனர் கமல்.

வீலர் பியோனா வாசித்து முடிக்க அனைவரும் கை தட்டி பாராட்டுகிறார்கள்.
வீலர் :தாங்க் யூ...தாங்க் யூ...
தன்யவாத்...சுக்ரியா...
இப்போ ஒரு தமிழ் பாட்டு பாடுங்க...
[மீண்டும் கரகோஷம்....]
ஐ டோண்ட் அண்டர்ஸ்டேன்ட் தேர் ஈஸ் அப்லாசஸ்.
பட் நோ சிங்கிங்....
ராம் : த அப்லாசஸ் இஸ் ஃபார் யுவர் டமில் சார்.
வீலர் : நன்றி.

பொதுக்கூட்ட மேடைகளில் ந...ன்...றி...எனச்சொன்னவுடன்... சோனியாவோ...அத்வானியோ....கை தட்டுவதில் சளைக்காத தமிழனை... நக்கலடித்திருக்கும்.....கமல் குசும்பன். 

May 27, 2012

Hey Ram-[ஹேராம்=005] அன்று சுத்தம்...இன்று யுத்தம்.


'சத்தியம் வெல்ல நிறைய முதலுதவி தேவை' என எழுதி ...
கமல் கையெழுத்து போட்டு கொடுத்த ஹேராம் திரைக்கதை புத்தகம் என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
அதிலிருந்து காப்பியடித்து...வசதிக்கேற்ப்ப தருகிறேன்.

முற்றிலும் புதிய பாணியில் வார்த்தைகளை கோர்த்து அசர வைப்பதில் வித்தகன் கமல்.
ஹேராம் திரைக்கதையை... புத்தக வ்டிவில் பட வெளியீட்டீன் போதே வெளியிட்டார்.
அதன் முன்னுரையில் கொஞ்சம் உங்களுக்கு தருகிறேன்.

 “திரைக்கதையை முழுமையாக எழுதி,பின் சினிமா எடுப்பது,
என்ற ஆரம்ப பாதுகாப்புக்கூட இல்லாமல்... முதலை குளத்தில் குதிக்கும்... குளந்தெரியாத,ஊருக்கு புதியவன் போல்தான்... இன்றைய வர்த்தக சினிமா இயங்குகிறது.

இந்தச்சுகாதாரமற்ற பாதையை... தற்காலிக வெற்றிகள்... பெற்ற சிலர் ஸ்தாபித்து விடுவோர்களோ... என்ற பயம்... எனக்கு உள்ளது.

உனக்கென்ன இத்தனை கவலை?கரிசனை? எனக்கேட்டால்...

நான் சினிமாவின் குழந்தை.
என் சினிமாவிற்க்கு... ஏதாவது ஆனால்,நான் அனாதை.
மூன்று வயதில் யதேச்சையாக வந்து சேர்ந்த... இந்த ஒரு தொழிலே..
பின்... என் உலகமாகும் என்று... அன்றே தெரிந்திருந்தால் இன்னும் கற்றிருப்பேன்”.

இந்த அடக்கம்....உழைப்பு....கற்றால் நீங்களும்... கமலே.

சாகேத்ராம் முகம்... மார்பிங்கில் மண்டையோடாக மாறி...
கடந்தகாலத்தில் பிரவேசிக்கிறது படம்.
இங்கே... கடந்த காலத்தை வண்ணத்தில் காண்பிக்கிறார்.
ஏன்?எதற்கு?எப்படி?
மூன்றுக்கும் விடை.... இந்தப்பதிவில்...

நிகழ்காலத்தை கலர்லெஸ்ஸாக்கி ...கடந்தகாலத்தை...கலர் புல்லாக்கி...
5000 வருடத்திற்க்கு முன்பே...கலை,கலாச்சாரம்,வாழ்வியல் அனைத்திலும் மேம்பட்டு இருந்தோம் என்பதை நமது ஆழ் மனதிற்க்குள் ஏத்துகிறார்.
குறிப்பாக...ஆம்பர்டோன் வண்ணத்தில்... காட்சிகளை அமைத்திருப்பதால்... கடந்த காலத்துக்குள் பார்வையாளன் சுலபமாக பயணிக்க முடிகிறது.

ஆம்பர்டோன் கலரையே... சற்று தூக்கலாக...வார்ம் டோனில் இருப்பது...  வன்முறை காட்சிகளுக்கு... பார்வையாளரை தயார்படுத்தும் உத்தி.
வன்முறை தூக்கலாக இருக்கும்... வெஸ்டர்ண் கிளாசிக் திரைப்படங்களில்[குட், பேட் &அக்ளி] இந்த கலர் டோனை பார்க்கலாம்.


வீலர்: சாகேத்....சாகேத்....மிஸ்டர் சாகேத்!
ராம்: யெஸ் மிஸ்டர் வீலர்?
வீலர்: வீ ஹாவ் பீன் ஆர்டர் ட்டூ லீவ் திஸ் சைட்
ராம்: அண்ட் வொய் மே ஆஸ்க் சர்.
வீலர்: ஹிண்டு,முஸ்லீம் ரயட்ஸ் சர்.நீட் ஐ சே மோர்.
ராம்: வாட் இஸ் இட்,திஸ் டைம் சர்.
வீலர்: வீ ...டோண்ட் நோ த டீட்டெய்ல்...பட், ப்ராட்லி பாகிஸ்தான்
ராம்: ஓ! ஆல் ரைட் மிஸ்டர் வீலர்.


[அம்ஜத்தை நெருங்கி]
டேய்,அம்ஜத்-போறும் விடு.வீ ஹேவ் டூ லீவ்.
அம்ஜத்: ஏன்?
ராம்: ‘கம்யூனல் ரயட்ஸ்’பெரிசா வரும்னு எதிர்பார்க்கிறாளாம்.
வீ ஹேவ் டூ கோ டூ கராச்சி.
அம்ஜத்: நோ...நோ..நோ வே...
நோ ரயட்ஸ் ஈஸ் கோயிங் டூ மேக் மீ லீவ் மை கிரேவ்.

இந்தக்காட்சியில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் உரையாடுகின்றன.
சாகேத்ராம்,அம்ஜத்,வீலர்...
மூவரும் வேறு கலாச்சாரப்பின்னணி உடையவர்கள்.
மூவரில் வீலர்தான் அதிகார வர்க்கம்.
வீலரோடு உரையாடும் சாகேத்ராமின் சொல்லாடல்,உடல் மொழி
ஷூ நக்கிகளை பிரதிபடுத்தும்.
இதற்க்காகவே கமல்... தனக்கு வசதியாக சாகேத்ராமை... அய்யங்காராக்கி விட்டார்.
அம்ஜத்தை ஏன்?எதற்க்கு?எப்படி எனக்கேள்வி கேட்கும் சித்தாந்தவாதியாக்கி விட்டார்.


’வாட் ஈஸ் இட்... திஸ் டைம்... சர்?’...என்ற கேள்வியின் மூலமாக
இந்து-முஸ்லீம் பிரச்சனை தொடர்ந்து காலகாலமாக இயங்கி வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறார்.
சமூக அக்கறை உள்ள படைப்பாளிகளின் படைப்பில் இக்கேள்விகள்...
தார்மீக கவலையுடன் வெளிப்படும்.

மொகஞ்சோதராவின் 5000 வருடப்பராம்பரியத்தை வசனத்திலும் ஏற்றி
டபுள் இம்பாக்ட் கொடுக்கிறார்.

அம்ஜத்: கிரைஸ்ட் பொறக்குறதுக்கு பல 1000 வருஷம் முன்னாலே...
'சீவேஜ் சிஸ்டம்' வேணும்னு நெனச்ச ‘சிவிலைசேஷன்’.
கொழந்தைக்கு வெளையாட பொம்மை வேணும்னு நெனச்ச சிவிலைசேஷன்.
நம்மள மாதிரி பெரியவங்க வெளயாட ஆளுக்கொரு சாமி வேணும்னு நெனக்கிற சிவிலைசேஷன் இல்லே...

சீவேஜ் சிஸ்டம்...கட்டுமானப்பணியில் நம் முப்பாட்டன் அட்வான்சாக இருந்ததை சொல்கிறது.

குழந்தைகளுக்கு விளையாட பொம்மை கொடுத்ததில் என்ன சிறப்பு?
குழந்தைகள் என்றால் வருங்காலம்.
அவர்களை சிறப்பாக எப்படி உருவாக்குவது?... என சைக்காலாஜி முறைப்படி அவர்களை அணுகியிருக்கிறான் நம் முப்பாட்டன்.
அன்று...புற வாழ்க்கை நாகரீகம் ,அக வாழ்க்கை நாகரீகம் இரண்டிலுமே நமது முன்னோர்கள் சிறந்திருந்தார்கள்.

இன்று...?
அதைத்தான் கலர் லெஸ்ஸாக்கி காண்பித்து விட்டாரே!
**********************************************************************************
நேயர்களே!
இந்த ஹேராம் தொடரை காட்சிக்கு காட்சி அதன் சிறப்பம்சங்களை...குறைந்தது எழுபது பதிவுகளில்... விளக்கவா?

கோடார்டு மாதிரி... ஜம்ப்கட் பார்முலாவில் இத்தொடரை இரண்டே பதிவுகளில் முடிக்கவா?

முதலாவதை தேர்ந்தெடுத்தால் என் அறிவுக்கு நல்லது..
திரைக்கலை நுட்பங்கள் பற்றிய நூல்களை படிப்பது...
[எல்லாமே பைபிள் சைசில் ஒல்லியாக இருக்கிறது]
டிஸ்கஸ் செய்வது என தேடல் அதிகரிக்கிறது.

இரண்டாவதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் எனது ஆரோக்கியத்துக்கு நல்லது....தூங்க முடியவில்லை.
இதே ரீதியில் போனால் குணாவாகி விடுவேன்.

உங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்.
**********************************************************************************

May 24, 2012

Hey Ram-[ஹேராம்=004]யுத்தம்... துவக்கம்...


ரவீந்த்ரநாத் தாகூர்,சத்யஜித்ரே போன்றவர்கள்....
அங்கம் வகித்த கல்கத்தா லிட்ரரி அசோசியேசன்....
படம் வெளியான கொஞ்ச நாட்களில்...கமலுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் என கேள்விப்பட்டேன்.
கலவரம் நடந்த கல்கத்தா பூமியிலேயே...
படம் பாராட்டப்படுவது மிகவும் கவனத்துக்குரிய ஒன்று.
கலவரத்தை.... பாரபட்சமாக காட்டியிருந்தால் கமலை கிழித்திருப்பார்கள்.
ஒரு படம் தவறான கருத்தை வலியுறுத்துகிறது என்றால்...
ஒரே வாரத்தில் படம் தூக்கப்பட்டு விட்டாலும்...
ஒரு வருடத்துக்கு வாதப்பிரதிவாதங்கள்...
அனல் பறக்கும் வரலாறு.... வங்காளத்துக்கு இருக்கிறது.

ஹேராம்... கமலின்.... 'ஞான குரு' அனந்துக்கு அஞ்சலி சொல்லி துவங்குகிறது.
ரகுபதி ராகவ... ராஜா ராம்.... என்ற காந்தியின் பேவரைட் பாடல்...
கமலின் உச்சக்குரலில்....டைட்டிலில் ஒலிப்பதே...
படத்தின் முதல் குறியீடு.
படத்தின் சென்டர் பாய்ண்ட்.... முதல் ஷாட்டிலேயே சொல்லப்பட வேண்டும்.
ஹேராமின் சென்டர் பாய்ண்ட்... காந்தியும்...அவரது கோட்பாடுகளான அகிம்சை,சமத்துவம்,சகோதரத்துவம்தான்.
காந்தியின் சிறப்பே.....சுதந்திரத்தை விட... ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தியது.!
இந்திய சுதந்திர... சரித்திரத்தையும்....
காந்தியின்... சத்திய சோதனையையும்....
முழுமையாக படித்திருந்தால்தான் இந்த கருத்து விளங்கும்.

[குழந்தையின் சிரிப்பும்...மகாத்மாவின் சிரிப்பும்...
இருவரும் ஒரே வயதில் இருப்பதை... உணர முடிகிறதா!]


1999ல் துவங்கும் படம்....பிளாக்&ஒயிட்டில் இருக்கிறது.
நிகழ் காலம் கலர் லெஸ்ஸாக இருப்பதை குறியீடாக்குகிறார்.
[கலர்லெஸ்ஸாக இருப்பதற்க்கு காரணம் பாபர் மசூதி,ராமர் கோயில்,
உலக மயமாக்கல்,2ஜி எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்]
இக்காட்சியில் சாகேத்ராம் மரணப்படுக்கையில் இருக்கிறார்.
அவரது பேரன் ராமும்,சிகிச்சை தருகின்ற... டாக்டர் முன்னுவும்.... நண்பர்கள்.
நிகழ்காலத்தில்...பிறப்பால் இந்துவாகிய ராமும்,பிறப்பால் முஸ்லீமாகிய முன்னுவும் நண்பர்கள்.
கடந்த காலத்தில் சாகேத்ராமும்...அம்ஜத்தும் நண்பர்கள்.
ஆங்கில இலக்கியத்தில் இப்படி காரெக்டர்களை அமைப்பது 'புக் எண்ட்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கமல் காரணத்துடன்தான்... இந்த வகையில்... இப்பாத்திரங்களை உருவாக்கி உள்ளார்.

பேரனின்... டயலாக்கின் மூலமாக படத்தின் ஜேனர்.....
ஆட்டோ பயாக்ராபி,பிக்‌ஷன்,திரில்லர் மூன்றும் கலந்த கலவை ...என ஆடியன்சுக்கு சொல்லப்படுகிறது.

கமல் ஹேராமில் எழுத்தாளர்[கதை,திரைக்கதை,வசனம்],இயக்குனர்,நடிகர் என மூன்று அவதாரம் எடுத்திருக்கிறார்.

முதல் காட்சியில்...எழுத்தாளர் கமல்...
காந்தியை மகாத்மா என வலியுறுத்துகிறார்.
ஆனால் முன்னொரு காலத்தில்.... நடிகர் கமல் ஒருபத்திரிக்கை பேட்டியில்...
 “ காந்தியை மகாத்மா என சொல்ல மாட்டேன்...நல்ல மனிதன் என ஒத்துக்கொள்வேன்” என்றார்.

கமல் ஹேராமை உருவாக்க நிறைய படித்தார்.
தகவல் சேகரித்தார்.
இந்த தேடலில் காந்தியை... மகாத்மா எனக்கண்டு கொண்டார் போலும்.



சாகேத்ராம் முகம்... மார்பிங்கில் மண்டையோடாக மாறி...
கடந்தகாலத்தில் பிரவேசிக்கிறது படம்.
இங்கே... கடந்த காலத்தை வண்ணத்தில் காண்பிக்கிறார்.
ஏன்?எதற்கு?எப்படி?
மூன்றுக்கும் விடை.... அடுத்தப்பதிவில்...

இந்த முதல் காட்சியே... நண்பர்களுக்கு வேறு விதமாகத்தோன்றலாம்.
போஸ்ட்மாடர்ன்...முறைப்படி கதை அமைந்திருப்பதால் அப்படித்தான் தோன்றும்...தோன்றவேண்டும்.
180 டிகிரியில்... படத்தை பார்த்து விமர்சித்தால்.... அனர்த்தம் வரும்.
360 டிகிரியில்... படத்தை பார்க்கும் போது அர்த்தம் புரியும்.


போஸ்ட்மாடர்ன் இலக்கியத்தை பார்த்தாலோ...
படித்தாலோ....ஒவ்வொருவருக்கும்....ஒவ்வொரு விதமாகத்தான் புரியும்.
இந்த நூற்றாண்டு மக்களுக்கு... இப்படித்தான் கதை சொல்லப்பட வேண்டும் என்பது இல்லை.இது போஸ்ட் மாடர்னுக்கு ஆகச்சிறந்த வியாக்கியானம்..
தமிழில்...சிறந்த போஸ்ட் மாடர்ன் இலக்கியம்...
சுந்தர ராமசாமியின்...ஜே...ஜே...சில குறிப்புகள்.
சிறந்த படம்...ஹேராம்.

பதிவுலகிலேயே உள்ள எழுத்துக்களை...
படிக்கும் போதே... உங்களுக்கு புரியும்...
நான்...
எனது...
நான் சொல்கிறேன்....
நாடே கொண்டாடும் நல்ல படத்தை...ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில்... தூ... என துப்புவது...
ஒரே ஒரு கடிதத்தை... அடிப்படையாக வைத்துக்கொண்டு...
இலங்கையில்... இந்திய ராணுவம் அகிம்சை வழியில் செயல்பட்டது என பொய்யுரைப்பது....
புளியம் கொம்பை பிடிக்கச்சொல்வது...
எல்லாமே போஸ்ட் மாடர்ன் காரெக்டர்கள்.
[ஹி..ஹி...நானும்தான்]

உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள்.
இத்தொடரை வெற்றிகரமாக எழுத....ஆதரித்தும்...எதிர்த்தும் வரும் பின்னூட்டக்களே என்னை இயங்கச்செய்யும்.  

May 22, 2012

Hey Ram-[ஹேராம்=003]இது தொடக்கமல்ல...


ஹே ராம்... பிரிவுயூ ஷோ முடிந்ததும் கே.பாலச்சந்தர் கமலை செல்லமாக நாலு அடி அடித்து “எங்கடா இருந்த... இவ்வளவு நாள்!” என்றார்.
மணிரத்னம், “ முன்னாடியே வந்திருக்கணும்” என்றார்.
ஜாம்பவன்களால் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட படம்.
பாமர ரசிகன் புரிய வேண்டுமே எனக்கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல்...என் படத்தை பார்க்க... கஷ்டப்பட்டு மேலே வா.... என எட்டாத உயரத்தில் வைத்து விட்டார்.

இப்போது கூட இப்படத்தை நான் சரியாக புரிந்து கொண்டேனா... என நேற்று நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சந்தேகம் வந்து விட்டது.
நண்பர் கொழந்த தனது பின்னூட்டத்தில்... காட்சிக்கு காட்சி கமலே இருந்தார்... என சொல்லி இருந்தார்.
எனக்கும் அந்த எண்ணமே இருந்தது.
ஆனால் நண்பர்... “கமல் சரியாகத்தான் செய்திருக்கிறார்.
ஆங்கில இலக்கியத்தில் ‘ஹீரோஸ் ஜேர்ணி’ என்ற மெத்தடில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இதன்படி கமல் காட்சிக்கு காட்சி வந்தே ஆக வேண்டும்.
பெரும்பாலும் கமல் தனது திரைக்கதையை இந்த பாணியில்தான் அமைப்பார்.
பிஸிக்கல் ஜேர்ணியுடன்...
[மெல்கிப்சனின்... அப்போகலிப்டோ-பாக்ஸ் ஆபிஸ் ஹிட்]
மெண்டல் ஜேர்ணியும்....
[பெர்க்மனின்...பெர்சோனா-பாக்ஸ் ஆபிஸ் பெயிலியர்]
கலந்து ஐரோப்பிய பாணியில் திரைக்கதை அமைத்திருப்பதால்...
படம் கிளாசிக் தன்மையில் பல மடங்கு உயர்ந்து விட்டது” என்றார்..

கமல் பாக்ஸ் ஆபிஸ் பற்றி கவலைப்படாமல்தான் படமெடுத்தார்.
12 கோடி போட்டு பணமெடுத்த பரத்ஷா....
வைரச்சுரக்கம் வைத்திருந்த பரம ஏழை.
இன்று நீங்கள் ரோட்டில் நாலு ரூபா தொலைத்து விட்டால்...
எவ்வளவு கவலைப்படுவீர்களோ....
அந்ந்ந்ந்ந்தளவு.... 12 கோடி தொலைந்து விட்டால்.... பரத்ஷா கவலைப்படுவார்.

விக்கிப்பீடீயாவில் ஹேராம் பற்றி மிகச்சிறந்த விமர்சனம் இணைத்துள்ளார்கள்.
தயவு செய்து அதை முழுக்க படித்து விடுங்கள்.

இருபது சேப்டர்கள் உள்ள மிக நீண்ட ஆய்வு இது....


http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

அமெரிக்க பேராசிரியரின் பதிவு இது....




http://www.uiowa.edu/~incinema/HEYRAM.html


இவர்கள் மாதிரி என்னால் எழுத முடியாது...இருந்தாலும்
இப்படத்தில் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம்....பரவசம்....உண்மைகள்...
இவற்றை... உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அடுத்தப்பதிவில் எனது எண்ணங்களில்.... கமலின் கை வண்ணங்கள்...

May 20, 2012

ஹேராம்-[Hey Ram-2000=002] பதிலுக்கு பதில்.

ஹே ராம் வெளியான போது எவ்வளவு எதிர்ப்பலைகள் கிளம்பியது என்பதை நீங்கள் விக்கிப்பீடீயா சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
காங்கிரஸ்காரர்கள் காந்தி பேரைச்சொல்லி வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள்.
படம் பார்க்காதவர்கள்,படத்தை புரியாதவர்கள்தான் அந்த வெறியர்களாக இருந்திருக்க முடியும்.

ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை எனது நண்பர் கருந்தேள் வைக்கிறார்.
அவர்கள் கொண்டாடக்கூடிய தகுதி ஹேராமிற்க்கு நிச்சயமாக இல்லை.
இந்தப்படம் தொடக்கம்முதல் இறுதி வரை இந்துத்வாவிற்க்கு எதிராக முழங்கியிருக்கிறது....
ஆனால் பெர்க்மன் பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னொரு நண்பர் இப்படம் முஸ்லீம்களுக்கு எதிராக இயங்குகிறது என ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்.
இந்தப்படத்தில் நிச்சயமாக அப்படி இல்லை.
மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி இருக்கிறார் இப்படத்தில்.
சாகேத் ராமை விட.... அம்ஜத்கானை உயர்ந்த படைப்பாக காட்டியிருக்கிறார்.
அம்ஜத்கான்... என்று தனது நண்பர் பெயரை கமல் சூட்டியதற்க்கே மாலை போட்டு வாழ்த்த வேண்டும்.
திரையில் வில்லனாக...நிஜ வாழ்க்கையில் மிக நல்லவராக வாழ்ந்து மறைந்த அந்த உத்தம நடிகனின் பெயரை சூட்டிய கமலின் மேல் கல்லெறியாதீர்கள்.

ஒரு சின்ன ப்ளாஷ் பேக்.
பசி என்ற படத்தை எடுத்த இயக்குனர் துரை என்னிடம் கூறியது.
பசி படத்தை இந்தியில் எடுத்தபோது... தமிழில் பசி நாராயணன் செய்த காரெக்டருக்கு அம்ஜத்கானை ஒப்பந்தம் செய்யப்போயிருக்கிறார்.
லட்சக்கணக்கான சம்பளம் வாங்கி அம்ஜத்கான் உச்சத்தில் இருந்த நேரம்.
பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல... ஒரு லட்சத்து ஒரு ரூபாயை ஒரு தட்டில் பூ...பழங்களொடு வைத்து எடுத்துக்கொண்டு பார்க்கப்போயிருக்கிறார்.
'நான் இப்படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்...
எனக்கு இந்த சம்பளம் போதும்' என ஒரே ஒரு ரூபாயையும்...பழங்களையும் எடுத்துக்கொண்ட பரமாத்மா அம்ஜத்கான்.

அம்ஜத்கான் என்றால் கப்பர்சிங்தான் ஞாபகத்துக்கு வருகிறது என  வாதிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
ஆரோக்கியமாக விவாதிக்க வாருங்கள்....கமலை பற்றியோ...
அவரது மற்ற படங்களை பற்றியோ விவாதிக்க நான் தயாரில்லை.
ஹேராம் என்ற படத்திற்க்குள் மட்டுமே நின்று விவாத்திக்க வரவேற்க்கிறேன்.

மகாதேவன் என்கிர வக்கிரம் பிடித்த ஒநாய்... போனமாதம் ஹேராம் பற்றி பதிவு போட்டுள்ளது.
நேற்றுதான் அதைப்படித்தேன்.
அந்த ஒநாய் கமல் பற்றியும்,கமல் மகளை பற்றியும் கேவலமாக கமெண்ட் அடித்திருக்கிறது.
கமல் தனது மகளிடம்....
'நீ யாரிடம் வேண்டுமானாலும் போ...காண்டம் போட மறக்காதே...
என சொல்வாரா?'
என அக்கிரமத்தனமாக கேட்டிருக்கிறான் மகாதேவன் எனப்பெயரிடப்பட்ட ராட்சஷன்.

அது மட்டுமல்ல...விமர்சனம் என்ற பெயரில் கேணத்தனமாக எழுதியிருக்கிறான்.
அதாவது நான் ஹேராம் திரைக்கதையை இப்படி அமைத்திருப்பேன்...
அப்படி வைத்திருப்பேன்.... என லூசுத்தனமாக எழுதியிருக்கிறான்.
அவனது கிளைமாக்ஸ் எப்படியென்றால்....என் கதையில் காந்தியைக் கொல்வதற்கான நியாயங்களை சாகேத் ராமுக்கு அபயங்கர் விலாவாரியாக எடுத்துச் சொல்வதைக் காட்டுவேன். சாகேத் ராமின் எளிய மனம் அதை எவ்வளவோ மறுத்துப் பேசியபடியேதான் வரும். கடைசியாகத்தான் கொல்லத் தயாராவார். அதன் பிறகு காந்தியை அவருடைய ஆஸ்ரமத்தில் தனியாகச் சென்று கொல்ல முயற்சி செய்வார். காந்தி தன் ஆஸ்ரமத்தில் திறந்தே கிடக்கும் அறையில் ராட்டையில் நூற்றுக் கொண்டிருப்பார். அப்போது ஒரு கறுத்த நிழலாக துப்பாக்கியுடன் சாகேத் ராம் நுழைவார். அவரைப் பார்த்த பிறகும் காந்தி சிறிதும் சலனப்படாமல், ராட்டையை நூற்றுக் கொண்டிருப்பார். மிஸ்டர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி உங்களை நான் கொல்லப் போகிறேன் என்று சாகேத்ராம் கர்ஜிப்பார்.எந்த காந்தியைக் கொல்லப் போகிறாய்… இந்துவும் முஸ்லீமும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று சொல்லும் காந்தியைக் கொல்லப் போகிறாயா… தாழ்த்தப்பட்ட சாதியினருக்குச் செய்த கொடுமைகளுக்கு மேல் சாதி இந்துக்களே பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று சொன்ன காந்தியைக் கொல்லப் போகிறாயா… கிராம ராஜ்ஜியத்தை முன் வைக்கும் காந்தியைக் கொல்லப் போகிறாயா? சொல் உன் துப்பாக்கியில் இருக்கும் தோட்டா உருவான இடத்தைச் சொல். என் ஒருவனைக் கொல்வதன் மூலம் உன் பிரச்னைகள் தீரும் என்றால் என்னை ஓராயிரம் குண்டுகளால் துளைத்துப் போடு… என்று நெஞ்சு நிமிர்த்தி காந்தி சொல்கிறார். அந்த நேரம் பார்த்து காந்தியைப் பார்க்க யாரோ வருகிறார்கள். சாகேத் ராம் ஓடி ஒளிந்து கொள்கிறார். வந்தவர் போன பிறகு காந்தி ராமை அழைத்து பேசுகிறார். ஓரிரு மாதங்கள் தன்னுடன் இருக்கும்படியும் அதன் பிறகும் தன்னைக் கொல்ல வேண்டும் என்று தோன்றினால் தானே அதற்கு இடம் குறித்துத் தருவதாகவும் சொல்கிறார்.


அடேய்...ஒரு திரைப்படத்தில் ஒரு பிரேமை நீக்கவோ...சேர்க்கவோ படத்தின் தயாரிப்பாளருக்கே உரிமையில்லை.
விமர்சகனுக்கு எப்படி இருக்க முடியும்?

அந்தப்பேய் காதல்,அங்காடித்தெரு,வழக்கு எண்ணை கூட கேவலமாக விமர்சித்திருக்கிறது.

உலகசினிமாக்களை மட்டுமே சிலாகிப்பது...உள்ளூர் சினிமாக்களை மட்டம் தட்டுவது என ஒரு வியாதி நிறைய பேரை பிடித்தாட்டுகிறது.
ஐரோப்பிய குசுவை சந்தணமாக மோந்து திரியும் இலக்கியவியாதி கோஷ்டிகள் நிறைய இருக்கிரது.
அந்த கோஷ்டிக்கே தலைவன் இந்த செந்நாய் மகாதேவன்.
உனக்கு என் நெல்லை நரகல் நடையில் சிலவார்த்தைகள்...
செத்த மூதி....
பேதியில போவான்....
இடி வுழுவான்....
வாலே...பாத்துருவோம்....

அப்பாடா...இறக்கி வைத்து விட்டேன்.
இனி ஹேராம் பற்றி தொடர் பதிவுகள் தொடரும்.

May 18, 2012

ஹேராம்-[Hey Ram-2000=001]இன்னும் பத்தாண்டுகள் கழித்து வர வேண்டிய படம்.


ஹேராம் வெளியான போது நான் வெறும் கமல் ரசிகன்.
சகலகலாவல்லவனை ரசித்து கிடந்தவன்....
பெர்க்மன் படம் காணக்கிடைக்கும் போது...
 எத்தகைய திகைப்பு...அச்சம்... ஆச்சரியம் ஏற்ப்படுமோ,
அதைத்தான் ஹேராம் எனக்கு ஏற்ப்படுத்தியது.

பட வெளியீட்டு விழா தண்ணீர் பார்ட்டியில் நடிகை ராதிகா அடித்த கமெண்ட் இது...
 “ டப்பிங் ரைட்ஸ் வாங்கி... தமிழ்ல டப் பண்ணி ரீலிஸ் பண்ணப்போறேன்”.

படம் புரியாத காரணத்தால் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான ரசிகர்களுக்கும் என் அனுபவம்தான் ஏற்ப்பட்டிருக்க வேண்டும்.
அதனால்தான் இப்படம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற முடியாமல் போனது.

ஆனால் என் நண்பர் ஒருவர் இப்படத்தை எப்போதும் சிலாகித்துப்பேசுவார்.
“தமிழில் வந்த போஸ்ட் மாடர்ன் பொயட்டிக் ஹேராம்...
இந்திய சுதந்திர சரித்திரத்தை.... கேப்ஸ்யூலாக்கி கமல் தந்திருக்கிறார்.
ஒரு நாய்க்கும்... படம் விளங்காது.
ரிச்சர்டு அட்டன்பரோவின் காந்தியை விட... இப்படத்தின் உயரம் பல மடங்கு அதிகம்.
காந்தி படம்... வன்முறையை செலபரேட் செய்தது...
அதனால் அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.
ஹேராம்... வன்முறையை கண்டஸ்ட் செய்தது...
அதற்க்கு பாக்ஸ் ஆபிஸ் கிடைக்காது.
நிஜ காந்தி சரித்திரத்தில்... சாகேத்ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை ப்யூஷன் செய்து கலப்பது எல்லோருக்கும் சாத்தியப்படாது.
தமிழில் கமல் ஒருவர் மட்டுமே... சாத்தியப்படுத்தி சாதித்திருக்கிறார்.”

நண்பரது விமர்சனத்தால் உந்தப்பட்டு... ஹேராம் படத்தை இன்று பார்த்தேன்.
இந்த பத்தாண்டுகளில்....
 குரோசுவா,பெர்க்மன் ,அண்டோனியோனி,கோடார்டு,டிசிகா போன்ற உலகசினிமா பிரம்மாககளிடம் பெற்ற பட்டறிவு மூலம் நான் ஒரே ஒரு மில்லி மீட்டர்தான் வளர்ந்திருக்கிறேன்.
நான் இன்னும் வளர வேண்டிய உயரத்தை.... ஹேராம் எனக்கு சுட்டிக்காட்டியது.
இந்தப்படத்தை முழுதாக உள் வாங்க...
இன்னும் பத்தாண்டுகள் எனக்கு தேவைப்படுகிறது.
வருடத்திற்க்கு நூறு உலகசினிமா வீதம்...
 இன்னும் 1000 படம் பார்க்க வேண்டும்.

படம் என்னுள் வெடித்த அனுபவம் ...அடுத்த பதிவில்....

டிஸ்கி:ஆளவந்தான் படத்தில்...
நந்து காரெக்டர்.... காப்பகத்திலிருந்து தப்பித்து போய் போதை மருந்து எடுத்துக்கொண்டு பேசும் போது...
எதிரில் உள்ள காரெக்டர்... “புரியலயே...” எனச்சொல்லும்.
கமல்... “புரியலயா...சப் டைட்டில் போடுறேன்.பாரு...புரியும்.” என்பார்.

ராதிகா நக்கலுக்கு...ஒரு படைப்பாளியின் பதிலடி.

May 14, 2012

Sinyora Enrica-[Turkey]2010 உறவுகள் தொடர்கதை...


நாய்களும்...ஆண்களும் உள்ளே வரக்கூடாது....
என வாசலில் ஒரு சிதிலமடைந்த போர்டு தொங்கும் வீட்டின் உரிமையாளர் சையநோரா என்ரிக்கா.
பேரிளம் பெண்.

கை விட்ட கணவனிடமிருந்து...கைப்பற்றிய வீட்டை, படிக்கும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டு வாழ்கிறாள்.
வீட்டில் ஆண்களை அனுமதிக்காத என்ரிக்கா... எகின் என்ற துருக்கி தேசத்து டீனேஜ் பையனை... இரண்டு மடங்கு வாடகைக்காக....அனுமதிக்கிறாள்.

எரின் வீட்டிற்க்குள் வந்ததும் அம்மண தரிசனம் கிடைக்கிறது.
நிலைக்கண்ணாடியில் ஒரு பெண்ணின் முழு நிர்வாண பிம்பம் தெரிகிறது.
நிர்வாண போஸ் கொடுத்து அசத்தியவள் வேலண்டினா.

கண்டதும் காதல் வந்து தொலைக்கிறது பையனுக்கு.
ஐ லவ் யூ... என இத்தாலியில் சொல்வதற்க்கு தீவிரமாக இத்தாலி கற்க ஆசைப்படுகிறான்.
என்ரிக்கா இத்தாலி கற்றுத்தர முன் வருகிறாள்.
என்ரிக்கா இத்தாலி மட்டுமா கற்றுத்தருகிறாள்?
பேரிளம் என்ரிக்காவுக்கும்... டீனேஜ் எரிக்குக்கும்... இடையே ஒரு புதிய உறவு பூக்கிறது.
அது நட்பா?பாசமா? காதலா?
படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களை விட என்னை மிகவும் கவர்ந்தது ஒரு ஒயின் பாட்டில்.
உலகின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவரான பெலினி...என்ரிக்காவுக்கு  பரிசாக கொடுத்த ஒயின் பாட்டிலை... ஒரு கதாபாத்திரமாக திரையில் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் Ali Ilhom.

அந்த ஒயின் பாட்டிலை எரிக் ஒப்பன் பண்ணி பருகுவதும்...
என்ரிக்கா.... துருக்கி சாராயத்தை... எரிக் டிப்ஸ்படி மிக்ஸ் பண்ணி குடிப்பதும் படத்தின் எடிட்டிங் கவிதை.

அவள் அப்படித்தான்... என்ற படத்தில்,
இளையராஜாவின் பியோனோ இசையில் பூத்த புதுக்கவிதையாக வரும்....

உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் புதுக்கதை...
ஒரு கதை... இன்று முடியலாம்...
முடிவிலும்... ஒன்று தொடரலாம்...
இனியெல்லாம்... சுகமே....

என்ற பாடலுக்கு...இப்படத்தின் காட்சிகளை தொகுத்தால் அழகிய காவியம் ரெடி.


விருதுகள் பற்றிய தகவல் உபயம்: IMDB

Antalya Golden Orange Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2010WonGolden OrangeBest Actress
Claudia Cardinale
Special Jury AwardBest Film
Elvan Albayrak
 


May 5, 2012

பாலாஜி சக்திவேல்... தமிழ் சினிமாவின் பிரம்மா!


வழக்கு எண் இன்று காலை காட்சி பார்த்து விட்டேன்.
கோவை அர்ச்சனா தியேட்டர் புரஜெக்டர் இன்று முதல் புனிதமாகி விட்டது.
ஆளிலில்லாத இருக்கைகள் நாணி தலை குனிந்து இருந்தது.
குனிந்த தலையை நிமிரச்செய்யும் பொறுப்பு ரசிகர்களே...உங்கள்
கையில்தான் இருக்கிறது.
916 ஹால்மார்க் தரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் உலக சினிமா.
ஒரு தலை ராகம்,16 வயதினிலேக்கு கொடுத்த ஆதரவை தமிழ் மக்கள் கொடுப்பார்களா?

காதலில்... வெற்றி கண்டு.... கல்லூரியில்... பெயிலானதால் கிடைத்த அனுபவம்...இத்தனை அற்ப்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறது.
இப்படி ஒரு படத்தை தந்த பாலாஜி சக்தி வேலுக்கு.... என்ன கைமாறு செய்யப்போகிறேன்?

நேரில் பார்த்தால் நெஞ்சாரத்தழுவலாம்...அதுவும் முடியாது...அவரும் என்னை மாதிரியே சைசு.
இப்போதைக்கு இந்தப்பதிவுதான்....இந்தக்குசேலனின்.... அவல்.
பாலாஜிக்கு.... எந்தக்காலத்திலும் அவல் பிடிக்கும்.

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின்...
நாம் பார்க்காத...பார்க்க விரும்பாத ...
வாழ்க்கையை பதிவு செய்துள்ளார்.
வலுவான கதைக்கு... திரைக்கதை உத்தியில்... பல்வேறு சாகசங்களை செய்து பிரமிக்க வைக்கிறார் பாலாஜி சக்திவேல்.


கதாநாயகி... மாவோயிஸ்டாக உருமாறும் இறுதிக்காட்சிக்கு கை தட்டாத கரங்கள்....வெறும் விறகுகள்.
அவளது தந்தை ஒரு கம்யூனிஸ்ட் போராளி என்பதை விசுவல் ட்ரீட்மெண்டில் விவரித்ததற்க்கு ஒரு ரெட் சல்யூட்.

எங்கேயிருந்து சார் பிடிச்சீங்க... அந்தக்கதாநாயகன்!
நான்... அவன்கிட்ட ரோட்டுக்கடையில...
இட்லி வாங்கி சாப்பிட்ட பீலிங் வருது.
அவன் முறுக்கு கம்பெனியில் பிழிபடுவதை...
 கொதிக்கும் எண்ணெய் உக்கிரத்தோடு...
படமாக்கிய விஜய்மில்டனுக்கு நன்றி.பாராட்டு.

பெண்களும்...பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் இப்படத்தை பார்ப்பது...அவசியம்.
குறிப்பாக... பெண் பதிவர்கள்...ஊமைத்தங்காய் பஜ்ஜி... பதிவையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இப்படத்திற்க்கு ஆதரவு தெரிவியுங்கள்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்... இந்த நாட்டிலே...
என்ற பாடலை பின்னணியாக ஒலிக்கவிட்டு...
இது வரை ஆண்ட திராவிடக்கட்சிகளுக்கு ஆப்படித்திருக்கிறீர்களே!
பாலாஜி சக்திவேல்...
நீங்கள்தான்... தமிழ் திரை உலகின் சேகுவேரா...

காவல்துறை... பணநாயகத்தின் ஏவல்துறை... என்பதை நீங்கள் சொல்லிய பாணி....தமிழ்நாட்டிலுள்ள அத்தனை லஞ்சப்போலிசையும்...
ஒரு கணம் திடுக்கிட வைக்கும்...

இப்படத்தை... பின்னணி இசையில்லாமல் எடுத்திருந்தால் படத்தின் உயரம் இன்னும் அதிகரித்திருக்கும்.
வெளி நாட்டு விருதுக்காக இப்படத்தை அனுப்பும் போது...
செய்து பாருங்கள்...பாலாஜி சக்திவேல்.
இப்படத்தில் பின்னணி இசை இல்லாததற்க்காகவே தனிப்பாராட்டு பெறுவீர்கள்.
அந்த பிச்சைக்காரன் பாடலை...
கிளைமாக்சில் பின்னணியாக ஒலிக்கச்செய்தீர்களே...
ஆயிரம் மின்னல் தாக்கிய எபெஃக்ட் கிடைத்தது.

படத்தின் டிடிஎஸ் ஒலி படத்தின் கவிதைத்தன்மையை சற்று குலைத்தது.
தேவையில்லாமல் சரவுண்ட் ஸ்பீக்கரில் வந்த சப்தங்கள்... படத்தோடு
ஒன்ற விடாமல் எரிச்சலளித்தது.

சத்யஜித்ரே,ரித்விக் கதக் உயரத்தை தொட முயற்ச்சித்தீர்களே...
அதற்க்கு தமிழ் ரசிகர்கள் என்ன பரிசு வழங்கப்போகிறார்கள்?
சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் காத்திருக்கிறேன்.

இப்படத்தின் டிவிடி...ப்ளூ ரே வெளியிடும் உரிமையை...
உலகின் தலை சிறந்த படங்களை மட்டும் வெளியிடும் கிரைட்டிரியன் நிறுவனத்தார்... வாங்குவது நல்லது.
அவர்களுக்கு இதை விட சிறந்த தமிழ் படம் இப்போதைக்கு இல்லை.

இப்படத்தை நாளைக்கு மறுபடியும் பார்க்கப்போகிறேன்.
வசனத்தை தவிர்த்து... விசுவல் ட்ரீட்மெண்டில்... படத்தை நகர்த்தி....
உலகின் எந்த உலக சினிமா இயக்குனருக்கும் நான் சளைத்தவன் இல்லை என
பாலாஜி சக்திவேல் உலகிற்க்கு செய்தி சொல்லியிருக்கிறார்.
அது உண்மைதான்... என எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் சத்தியம் செய்து சொல்லுவேன்.

May 2, 2012

கமல் வீட்டை விற்று விட்டார்கள்.


கமலை பற்றி... சகலகலாவல்லவன் என்ற தொடரை நான் தயாரித்தேன்.
அந்த தொடரில் பரமக்குடியில்... கமல் பிறந்த வீட்டை காட்ட விரும்பினேன்.
கமலிடம் அனுமதி கேட்டேன்.
உரிமையாளர் அனுமதிப்பாரா எனத்தெரியாதே? என்றார்.
எப்போதும் போல் கமல் பேசுவது புரியாமல் முழித்தேன்.
அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதில் ஒரு கலக்கம் தெரிந்தது.
பறி கொடுத்த ஏக்கம் தெரிந்தது.
நான் அவர் கண்களை உற்று நோக்குவது தெரிந்ததும் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
எப்போதுமே கமல் திருக்குறள் மாதிரிதான் பேசுவார்.
நாம்தான் உரை எழுத வேண்டும்.

கமல் பேசியதற்க்கு விளக்கம் சாருஹாசனிடம் கிடைத்தது.
அந்த வீட்டை விற்று விட்டதாகவும்....பரமக்குடி போய் கமலின் தாய் மாமனை சந்தித்தால் அவர் உதவுவார் என்றார்.

பரமக்குடி சென்று கமலின் கடைசி தாய் மாமனை சந்தித்து விபரம் சொன்னோம்.
கமலுக்கு மொத்தம் ஏழு தாய் மாமன்கள்.
அதில் ஒருவர் கமலை விட அழகாக இருப்பார்.
நான் சந்தித்தது கடைசி மாமன்.
இவர்... சின்ன வயதில் கமலை தூக்கிகொண்டு மதுரை வீரன் படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்திருக்கிறார்.
பரமக்குடி சண்டியர்.
சிலம்பத்தில் சூரன்.
கமலின் வீரம்... இவரிடம் பெற்ற கடன்தான்.

கமல் பிறந்த வீடு.... என்று ஒரு மினி அரண்மனையை காட்டினார்.
மிரண்டு போய் விட்டேன்.
முன் வாசலில் தெரு...பின் வாசலில் வைகை நதி.வெள்ளக்காலங்களில் வைகை சமையலறைக்கே வந்து விடுமாம்.
கமல் வீட்டின் விஸ்தீரணத்தின் எளிய உதாரணம் இது.
வீட்டின் முன் வாசல்... சென்னை கடற்க்கரை சாலையில் ஆரம்பித்தால்...  வங்காள விரி குடா அலை தொடும் தூரத்தில் பின் வாசல் உள்ளது.

கமலின் தாத்தா காலத்தில் ஒரு வேளைக்கு 25 கிலோ அரிசி சமைத்திருக்கிறார்கள்.
அத்தனை உறவுகள்....வேலையாட்கள்...தருமங்கள்.

பிறந்த வீட்டை இழந்து நிற்க்கும் வலியை....
பூர்வீக மண்ணில்...
இன்று ஒரு பிடி கூட இல்லாமல் தவிக்கும் என்னால் இன்றும் உணர முடியும்.